ஜேர்மன் பிரஜைக்கு வழிகாட்டுவதாக கூறி கொள்ளை

207 0

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ஜேர்மன் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, கிங்குரான்கொட பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த 22 வயதான இம்மானுவேல் எனப்படும் ஜேர்மன் நாட்டவர், சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளார்.

இந்தநிலையில், தான் ஹட்டன் பகுதியில் வைத்து சந்தித்த வழிகாட்டி ஒருவருடன் இரு நாட்கள் சிகிரியா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின்னர், இன்று அதிகாலை ஹபரணவில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் கிங்குரான்கொட ஊடாக பொலன்னறுவை நோக்கி பயணித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த வழிகாட்டி, முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி தனது பயணப் பை மற்றும் பணப் பையை எடுத்துச் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, இம்மானுவேல் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதன்படி, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை கைதுசெய்து விசாரித்துள்ளனர்.

எனினும், அவர் சந்தேகநபரை அறிந்திருக்கவில்லை எனக் கூறியுள்ளதோடு, கிங்குரான்கொட – ஜெயவிக்ரம சந்திப் பகுதியில் வைத்து அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபரைக் கைதுசெய்யும் பொருட்டு ஹபரண, மின்னேரியா மற்றும் கிங்குரான்கொட ஆகிய பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களை ஆராயும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிங்குரான்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment