நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும்-ஆறுமுகன்

337 0
நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை 10.01.2018 அன்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் கொண்டனர். அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது, நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (11) தலவாக்கலை நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது வாக்குரிமைகளை கொண்டு நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் மக்களுக்குரிய வாக்குரிமைகளை அடுத்தவர்களுக்கு வழங்கி வருவதனால் நிலையான ஓர் அபிவிருத்தி மற்றும் உரிமைகளை அடைய முடியாமல் போகின்றது.

ஹட்டன் நகரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆட்சியில் இருந்த போது ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிரம்பிய பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்தது. இன்று அவ்வாறான நிலை உள்ளதா ? சிந்தித்து பாருங்கள். அபிவிருத்தியில் ஒரு மாற்றத்தினை நம்மவர்களை கொண்டு செயற்படுத்துவோம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு மாற்றம் தேவை என்பதற்காக வாக்களித்தீர்கள். அந்த மாற்றம் உங்களை திருப்பி அடித்துள்ளது என்பதை உணர்ந்து இம்முறை அவரவர் பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment