நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை திறந்து வைத்திருக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்க முடியும் என அறிவித்துள்ளது.
இதேவேளை, மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையையும் அண்மையில் அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மது ஒழிப்பு, போதைக்கு முற்றுப் புள்ளி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான மதுப் பாவனையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட உரையில் பியர் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருந்த நடவடிக்கைக்கு பாரிய எதிர்ப்பலைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.