பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது”

588 0

“வட மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது” என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“வட மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வட்டார ரீதியில் வெற்றி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி என்ற மனோபாவத்துடன் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டத்தினை ஆண்கள் முன்னெடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

வட்டார ரீதியில் பெண்கள் தெரிவு செய்யப்படாமல், கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் ஆண்கள் மாத்திரம் வெற்றிபெற்றால் மேலதிக பெயர்ப்பட்டியலில் இருந்து பெண்களின் பெயர்களை மாத்திரமே தெரிவு செய்து அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தில் கட்சி செயலாளருக்கு பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் பெண்கள் போட்டியிடும் வட்டாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் அவதானத்தினையும் வழங்க வேண்டும்.

இதேவேளை சில அபேட்சகர்களும், கட்சிகளும் இனரீதியிலான பிரசாரங்களை முன்னெடுப்பதனை அவதானிக்க முடிகின்றது. சில கட்சிகளின் பெயர்கள் இனத்தினை அடையாளப்படுத்தும் பெயர்களில் காணப்பட்டாலும் அவர்கள் குறிப்பாக அந்த இனத்திற்குத்தான் வாக்குகளை வழங்கவேண்டும் வேறு இனத்தவர்கள் பிரசாங்களில் ஈடுபட முடியாது என்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே இனரீதியாகவோ, பிரதேசவாத்தினை தூண்டும் வகையிலோ பிரசாரங்களில் ஈடுபடுவதை கபே அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

ஆகவே இவ்வாறான நிலைப்பாட்டை நாம் எமது கண்காணிப்பாளர்கள் அதிகளவானோரை வட மாகாணத்தில் நிறுவி கண்காணிப்போம்.” எனத் தெரிவித்தார்.

Leave a comment