அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

248 0

பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதற்காக நாளை மறுதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக் காக்கும் பொருட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (12-ம் தேதி) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு நிகழ்வாக விடுமுறை அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பல்கலை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 12-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment