முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவரை நேரில் சந்தித்தவர் குறித்த விபரங்களை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
புகார் அளித்தோர், புகாருக்கு உள்ளானோர் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வரும் இந்த ஆணையத்தில் தினமும் பல புதிய தகவல்கள் பதியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்யக்கோரி அப்பல்லோ நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்பலோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராமமோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.