டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7-வது ஆண்டாக சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையின்போது அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுவது அங்கு தொடர்கதை ஆகி வருகிறது. இதுவரை உள்நாட்டுப் போரினால் அங்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்; சுமார் 25 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதல் நடைபெற்றது. இன்னொரு முனையில் பீரங்கிகளைக் கொண்டும் சுட்டுத்தள்ளினர்.
இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது பதற வைக்கிற தகவலாக அமைந்துள்ளது.
இந்த தாக்குதல்களை நடத்தியது அதிபர் ஆதரவு படைகளா அல்லது அவர்களுக்கு பக்க பலமாக உள்ள ரஷியாவின் படைகளா என்பது தெரியவரவில்லை என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.