போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 5 நாட்களில் மின்சார ரெயிலில் 6.2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில் மின்சார ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார நாட்கள் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. 8, 9, மற்றும் 10-ந் தேதிகளில் கூடுதலாக 30 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. ரெயில் நிலையங்களில் கூடுதலாக 44 டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட்டன. 8 டிக்கெட் பரிசோதகர் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து ரெயில் நிலைங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மின்சார ரெயிலில் 6.2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.