கடுகஸ்தோட்டை – யடியாவல – அந்தோனிவத்தை பகுதியில் அறையொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 96 வயதான மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரிடமுள்ள சொத்தை அபகரிப்பதற்காக, அவரது மகளே இவ்வாறு தாயை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைத்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தனது சகோதரியின் குறித்த செயற்பாடு தொடர்பில், சகோதரர் ஒருவர் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினர் நேற்று இவரை மீட்டுள்ளனர்.
இதேவேளை, சிறுநீர், மலம் போன்றவற்றை சுத்தப்படுத்தாமல் அவ்வாறே விடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உடலில் புலுக்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், பூட்டி வைத்த அறையை திறந்து உள்ளே சென்ற அதிகாரிகளிடம் அந்த வயோதிபப் பெண்மணி மிகவும் பரிதாபமான முறையில் உணவு கோரியதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான இவரை ஏனைய சகோதர சகோதரிகள் பார்க்கவும் குறித்த பெண் அனுமதிக்கவில்லை எனத் தெரியவந்தள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் நிலைகண்டு அவருக்கு உணவளிக்க முற்பட்ட அயலவர்களுக்கும் அவரது மகள் மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மீட்கப்பட்ட மூதாட்டி சுத்தப்படுத்தப்பட்டு வைத்திய சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.