டொனால்டு டிரம்ப்பின் குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியர் ஒருவரது அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது.
நியூஜெர்சியில் உள்ள கார்டெரெட் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் பல்ஜிந்தர் சிங் (43). இவர் கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்காவின் கசான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றார்.
அப்போது அவர் பயணத்துக்கு தேவையான ஆவணங்கள், அடையாள ஆவணங்கள் எதுவுமின்றி சென்றார். எனவே தனது பெயரை டேவிந்தர்சிங் என பெயர் மாற்றம் செய்து பயணமானார்.
அதை தொடர்ந்து அவர் மீது குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறும்படி கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டது.
இதற்கிடையே ஒரு மாதம் கழித்து அமெரிக்க குடியுரிமை கேட்டு குடியுரிமை துறையில் இவர் விண்ணப்பம் செய்தார். அப்போது தனது பெயரை பல்ஜிந்தர்சிங் என பதிவு செய்தார்.
இந்த நிலையில் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து ‘இயற்கை குடிமகன்’ உரிமையை கடந்த 2006-ம் ஆண்டு பெற்றார். அதன் மூலம் அமெரிக்காவில் அவர் தங்கியிருந்தார்.
சமீபத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நியூஜெர்சி கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பல்ஜிந்தர்சிங்கின் இயற்கை குடியுரிமையை பறித்து உத்தரவிட்டார். பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இதன் மூலம் இவர் இயற்கை குடியுரிமையை இழந்த முதல் அமெரிக்க வாழ் இந்தியர் ஆகிறார்.