சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால் இது பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்கூடம் கட்டி வருகின்றனர். இதற்கு இணையாக சீனா மட்டும் தனியாக ஒரு விண்வெளி ஆய்வகம் உருவாக்கியது.
இதற்கு ‘தியாங்காங்’ என பெயரிடப்பட்டது. இந்த ஆய்வகம் செயல் இழந்து விட்டது. எனவே இது பூமியை நோக்கி வருகிறது. பல்லாயிரம் டன் எடை கொண்ட இந்த விண்வெளி ஆய்வகம் பூமியின் மீது மோதி கடும் சேதத்தை விளைவிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை சீன விஞ்ஞானி மறுத்துள்ளார்.
சீன விண்வெளி தொழில் நுட்ப அகாடமியின் மூத்த விஞ்ஞானி ஷு ஷாங்பெங் கூறும்போது, “செயல் இழந்த தியாங்காங் 1 விண்வெளி ஆய்வகம் பூமியில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாது.
பூமியின் பரப்பில் நுழைந்தவுடன் அது எரிந்து விடும். மீதம் இருக்கும் உடைந்த பாகங்கள் பூமியின் பின்புறமாக பசிபிக் கடலில் விழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் என மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு சீன விஞ்ஞானி ஷுஷாங்பெங் விளக்கம் அளித்துள்ளார்.