அமெரிக்காவில் கடும் நிலச்சரிவு: 13 பேர் பலி – 300 பேர் சிக்கி தவிப்பு

355 0

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கலி போர்னியாவில் புயல் காரணமாக பலத்தமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெற்கு கலிபோர்னியா கடுமையாக பாதிக்கப்பட்டது.

அங்குள்ள கிழக்கு சாந்தா பார்பரா, ரோமரோ கேன்யான், மான்டெசியோ உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன.

தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏராளமான ஹெலிகாப்டர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி முதல் உலகப்போரின் பாழடைந்த பகுதி போன்று காட்சியளிக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த மாதம் காட்டுத்தீ பரவியது.

இதனால் ஏராளமான மரங்கள், மற்றும் வனப்பகுதிகள் அழிந்தன. இதனால் தண்ணீரை உறிஞ்ச வழி இல்லாததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment