தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களில் தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர மேலும் சில விபத்துக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகங்களின் 10 தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து வருவதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட முடியாமல் உள்ளது.
சுமார் 1½ லட்சம் பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
இதையடுத்து தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை தேர்வு செய்து அரசு பஸ்களை வழக்கம் போல இயக்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்காலிக டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
ஆர்.டி.ஓ.க்களின் நேரடி மேற்பார்வையில் தற்காலிக டிரைவர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று வரை சுமார் 15 ஆயிரம் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
மாநகர பேருந்துகள் மட்டுமின்றி தொலை தூர சேவைகளுக்கும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக டிரைவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட முதல் நாளே விருத்தாலத்தில் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சீயோன் டேவிட் என்பவர் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து தற்காலிக டிரைவர்கள் இயக்கிய பஸ்கள் விபத்துக்குள்ளானது.
சென்னை பிராட்வேயில் நேற்று தற்காலிக டிரைவர் ஓட்டிய மாநகர பேருந்து மோதி திருவொற்றியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தார். பஸ்சை ஓட்டிய தற்காலிக டிரைவர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களில் தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர மேலும் சில விபத்துக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர். பல பஸ்கள் சேதம் அடைந்துள்ளன.
தற்காலிக டிரைவர்கள் மூலம் மாநிலத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களிலும் சுமார் 75 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்களை 100 சதவீதம் இயக்க மேலும் தற்காலிக ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.450 முதல் ரூ.600 வரை வழங்கப்படுகிறது. இதனால் பஸ் ஓட்ட நிறைய பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால் சில தற்காலிக டிரைவர்களால் விபத்து ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது விலகி வருகிறது. இதனால் தற்காலிக டிரைவர்கள் மூலம் நிலைமையை சமாளிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாகி உள்ளது.