தனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் – அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என மீயுயர் நீதிமன்றிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இது குறித்த விவாதம், நாளை மறு நாள் (11) திறந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் கவனத்துக்கு இது குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தனது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு வருடம் தான் பதவியில் தொடர்வதற்கு ஏதேனும் தடைகள் உள்ளனவா என்று கேட்டுள்ளார்.
மேலும், இதற்கான பதிலை இம்மாதம் பதினான்காம் திகதிக்குள் தருமாறும் கோரியுள்ளார்.
இக்கடிதம் குறித்து மீயுயர் நீதிமன்றப் பதிவாளர் அனுப்பியுள்ள பதிலில், ஜனாதிபதியின் கடிதத்தின் பேரில் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு ஆராயப்படப் பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள், அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதில், ‘இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்பவர்கள் ஐந்தாண்டு காலம் பதவி வகிக்கலாம்’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.