குல்பூஷண் ஜாதவை அவரது தாய், மனைவி சந்தித்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் ஏராளமான இந்தியர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, அவரது தாய் அவந்தியும், மனைவி சேத்தன்குல்லும் கடந்த மாதம் 25-ந் தேதி சந்தித்து பேசினர். இதற்காக சென்றிருந்த போது அவர்களின் தாலி, வளையல்கள் மற்றும் பொட்டு போன்றவற்றை பாகிஸ்தான் அதிகாரிகள் அகற்றச்செய்ததுடன், அவர்கள் அணிந்திருந்த உடையையும் வலுக்கட்டாயமாக மாற்ற வைத்தனர். மேலும் சேத்தன்குல்லின் காலணியையும் அவர்கள் பறித்துக்கொண்டனர்.
பாகிஸ்தான் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் நேற்று ஏராளமான இந்தியர்கள் கண்டன போராட்டம் நடத்தினர். இதில் அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானியர்கள், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சேத்தன்குல்லின் காலணியை பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்ததை கண்டிக்கும் வகையில் தூதரக அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ஒரு அட்டைப்பெட்டி நிறைய காலணிகளையும் கொண்டு வந்திருந்தனர்.
மணமான இந்திய பெண் ஒருவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒழுக்கம் கெட்ட முறையில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர்கள், குல்பூஷண் ஜாதவ் மீது பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு நடத்திய விசாரணை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.