மடகாஸ்கர் நாட்டில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் பலியாகினர். மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு அவா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. இப்புயலினால் மடகாஸ்கரின் கிழக்கு பகுதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அப்போது மணிக்கு 140 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புயல் மழை காரணமாக அண்டனானரீவோ பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 29 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்புயலினால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியை தாக்கிய புயலினால் சுமார் 78 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.