கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவருமே இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் வேட்பாளரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வாக்குகள் கேட்டு சென்றபோது தனது வீட்டிற்கு கல்லால் தாக்கினார்கள் எனவும், தான் தனிமையில் இருந்ததாகவும் கூறி பெண் வேட்பாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கவில்லை. எமது வேட்பாளருக்கு ஆதரவு தேடி அப்பகுதிக்கு வீடு, வீடாக சென்றோமே தவிர இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் வேட்பாளர் பொய்யான குற்றச்சாட்டை எம்மீது சுமத்துகின்றார் என இ.தொ.காவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் இது தொடர்பாக புகார் செய்த பெண் வேட்பாளரிடம் வினவியபோது,
“நேற்று மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த சிலர் இப்பகுதிக்கு வாக்காளர்களின் வீடுகளுக்கு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தேடி வாக்குகளை கேட்டு வந்தார்கள். அச்சமயம் நான் தனிமையில் வீட்டில் இருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் வந்த இவர்கள் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி எனது வீட்டின் கதவை உடைத்தது மட்டுமின்றி வீட்டின் ஜன்னல்கள் போன்றவற்றையும் உடைத்து உள்ளே வர முயற்சித்தனர்.
இதன்போது நான் வீட்டின் சமயலறை பக்கமாக இருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டேன் என தெரிவித்த இவர். இவ்வாறு பெண் வேட்பாளரின் மீது தாக்குதல் நடத்தி வாக்கு வாங்குவதற்கு இவர்களுக்கு வெட்கம் இல்லையா?” என இவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குறித்த ஆண் வேட்பாளரிடம் வினவியபோது,
“நான் பிரச்சார நடவடிக்கைக்காக நேற்று மாலை எங்கும் செல்லவில்லை. எனது ஆதரவாளர்கள் கொமர்ஷல் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எனக்கு ஆதரவினை தேடி சென்றிருக்கலாம். ஆனால் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்ததாக எனக்கு தெரியாது.
கொமர்ஷல் பகுதி மக்களின் ஆதரவினை தன்வசம் வைத்துக்கொள்ள இந்த பெண் வேட்பாளர் தனது வீட்டிற்கு தானே கல்லை அடித்துக்கொண்டு என்மீது பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றமை வியப்புக்குரிய விடயமாகும்.
அதேவேளை இவ்வாறான ஒரு பிரச்சினையை உருவாக்கி அனுதாப வாக்குகளை பெற்றுக்கொள்வது இவரின் இலக்காக அமைந்திருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறா இருந்தாலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சொல்லப்படும் இரு தரப்பினரும் பொலிஸ் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.