முற்றவெளியில் விகாரை அமைக்கும் எண்ணமில்லை : நாக விகாரை விகாராதிபதி

700 0

யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லையென நாக விகாரையின் தற்போதைய விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார். 

நாக விகாரையின் விகாராதிபதி மடிகே பஞ்ஞாசீக மகா நாயக்க தேரர் இறைபதம் அடைந்ததை தொடர்ந்து அவருடைய இறுதிக்கிரியை கடந்த 22 ஆம் திகதி முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.நாகவிகாரையில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே ஸ்ரீ விமல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பாக யாழ்.மாநகர சபையிடம் கேட்டிருந்தோம். அவர்கள் அந்த இடத்தை தமக்கு சொந்தமானது அல்ல என கூறியதுடன் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியே என சொன்னார்கள்.

பின்னர் தொல்லியல் திணைக்களத்தை சந்தித்து அனுமதியை பெற்றிருந்தோம். தகன கிரியை நிறைவடைந்த பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறினார் இந்து கோவிலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டமையினாலேயே பிரச்சினை எழுந்தது என கூறினார்.

இந்த விடயத்தை முன்னதாகவே கூறியிருந்தால் நாங்கள் கோவில் நிர்வாகத்துடன் பேசியிருப்போம். மேலும் விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய உடல் பொது இடத்திலேயே தகனம் செய்யப்படும் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதேபோல் தகன கிரியையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டமை தொடர்பாகவும் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்கள் எழுந்தது.

 

பொதுவாக விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி சடங்கில் பௌத்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால் இங்கே பௌத்தர்கள் இல்லை. ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் சிலர் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக நாக விகாரையை இழுத்து இனவாதமாகவும், மதவாதமாகவும் பேசுகிறார்கள். ஆனால் நாக விகாரை இனவாதம், மதவாதம் பரப்பும் இடமல்ல. அது இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உண்டாக்கும் பாலமாகும்.

அதனை விட பெருமளவில் சமூக சேவைகளை செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே முற்றவெளி மைதானத்தில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி அல்லது விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என்றார்.

Leave a comment