பஸ் ஸ்ட்ரைக்: போக்குவரத்து அமைச்சரருடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

242 0

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 6-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக, இன்றைக்குள் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டால் அவர்கள் மீது நவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் கூறியிருந்தார்.

Leave a comment