விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத் திட்டம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஒருகட்டமாக மேற்குறிப்பிட்ட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்கவின் தலைமையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இவ்வொப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் ஒப்பந்தத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிங்ப்பூர் WEC Engineers and Constructors Pte Ltd நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இதில் PT Wijaya Karya (Persero) Tbk மற்றும் China National Chemical Engineering No. 14 Construction Co. Ltd. நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில் புதிய விமான தளங்களை உருவாக்கும் பணி இடம்பெற்று வருகினறன. இதில் E நிலையத்திலேயே புதிய விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
2013 ஆண்டே இத்திட்டத்தை மேற்கொள்ளும் பணியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. 05.09.2013ஆம் ஆண்டு இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் பெறப்பட்டது.
இதற்கமைய அபிவிருத்திப் பணியை தொடர தன்னார்வ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மேற்கொள்ளப்படவிருந்தது. இதற்கு பல முன்மொழிவுகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் முன்வைப்பப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகளும் யோசனைகளுக்கமைய அபிவிருத்திப் பணி நிறுத்தப்பட்டது. எனினும் நாட்டுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் ஏற்படும் நட்டத்தை குறைக்க 2015 ஆண்டு அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவுசெய்தது. ஆனால் கடந்த காலத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ள முடியாது போனது.
ஆனால் தற்போதைய பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வழிகாட்டலுக்கமைவாக இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமைச்சர் இத்திட்டம் தொடர்பாக அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு வழங்கியுள்ளார்.
இதற்கமைய 45 நாட்களுக்குள் ஒப்பந்த விதிமுறைகளுக்கமைவாக வெளிநாட்டு நிறுவனத்தோடு தொடர்புடைய இவ்வெப்பந்தக் காரர்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறிப்பிடுகையில்,
‘நாங்கள் 2013 ஆம் ஆண்டு யோசனைக்கமைய ஒப்பந்தம் செய்திருந்தால் மிகப் பெரிய நட்டம் நாட்டுக்கும் கூட்டுத்தாபனத்திற்கும் ஏற்பட்டிருந்திருக்கும். குறிப்பாக முதற்கட்ட திட்டத்தின் படி கூட்டுத்தாபனத்திற்கு 74.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால கடனாக இருந்திருக்கும், தற்போது சரியான ஒப்பந்த காரர்களை தேர்வு செய்தமையால் எமக்கு 71.1 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது. இதனால் 3 மில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடிந்துள்ளது.
இந்த திட்டம் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் கடின உழைப்பால் சில காலங்களுக்குள்ளே இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. சில அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதப்பட்டடிருந்தன ஆனால் எமது அமைச்சரின் ஆலோசனைக்கமைய அவற்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுளோம்.
இத்திட்டங்களின் மூலம் எம்மால் நாட்டின் சக்தி வளப்பாதுகாப்பையும் சிறந்த சேவையையும் வழங்க முடியும் என நம்புகின்றோம். நாங்கள் சில இலக்குகளையும் தற்போது அடைந்துள்ளோம். மேலும் இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் ஆசிய வலயத்தில் தரமான எரிபொருளை விமானங்களுக்கு விநியோகிக்க முடியுமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.