வாளேந்திய சிங்கத்தின் வாள்களை ஒத்த வாள்களை ஏந்தியபடி ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உதய கம்மன்பில அணியினர் வந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாள்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
ஆட்சி அதிகாரத்தை அளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி தனது நன்றியை பூரணமாக செலுத்தியுள்ளார்.
தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தின் வாளினை ஜனாதிபதி தனது கையிலேந்தி மூன்று வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளது.
நாட்டு மக்களின் அதிகாரத்தினை அனைவருக்கும் பொதுவானதாக பயன்படுத்த வேண்டும் . ஒருதலை பட்சமாக செயற்படுவது தேசிய இலட்சனையினை அவமதிக்கும் செயலாகும்.கடந்த கிழமைகளில் ஜனாதிபதியின் வாள்வீச்சு எவர் மீது பாயுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் வாள் வீச்சு இடம்பெற்றது.
இருந்தபோதும் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் கூரிய வாளினைப்போலல்லாது துருப்பிடித்த வாள் வீச்சாயிற்று. யாருக்கு வாள் வீசப்பட்டது. வீசிய வாள் எவருக்குப் பாய்ந்தது, இதன்போது இரத்தம் யாருக்கு வழிந்தது. இது சினிமாவில் வரும் ஆரம்பக் காட்சிகள் போல் இருந்தது. ஆனால் பொறுமையாக இருந்து ஜனாதிபதியின் படத்தை பார்த்த எமக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கீகாரத்தை கொடுத்த பொதுமக்கள் பிணைமுறி விவகாரத்தில் வாள் வீச்சு பயனற்றது என்ற விடயத்தை நன்கு அறிந்துக்கொண்டனர்.
இதன் காரணமாகவே நாம் இன்று துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.