குல்பூஷன் குடும்பத்தினரை அவமரியாதையாக நடத்தியதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரிய வந்தது. மேலும் ஜாதவ் மனைவியின் செருப்பில் கேமரா இருப்பதாக கூறி, அதனையும் கழட்ட கூறியுள்ளனர். ஜாதவ் குடும்பத்தினர் அவமரியாதையாக நடத்தப்பட்ட கூறப்பட்டது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பலத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜாதவ் குடும்பத்தினருக்கு ஆதரவாக வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் சமூக ஆர்வலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். ‘சப்பல்சோர்பாகிஸ்தான்’ என்ற வாசகம் அடங்கிய பாதாகைகள் மற்றும் செருப்புகளையும் தூக்கி வந்து முழக்கமிட்டனர். மேலும் செருப்புகளை பாகிஸ்தான் தூதரகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக கூறி போராட்டம் நடத்தினர்.
கேமரா இருப்பதாக கூறி ஜாதவ் மனைவியின் செருப்பை கழட்ட கூறியுள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தான் அரசின் குறுகிய மனப்பான்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.