சென்னை ஓட்டலில் மத்திய பெண் மந்திரி ஸ்மிருதி இராணி பொதுமக்களோடு மதிய உணவு சாப்பிட்டார். அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர்.
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று சென்னை வந்தார். கன்னியாகுமரி கடல் நடுவில் விவேகானந்தர் மண்டபம் கட்டிய ஏக்நாத் ரானடே பற்றிய குறும்படம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. அதை ஸ்மிருதி இரானி பார்த்தார்.
நிகழ்ச்சி முடிந்து மாலை 3.30 மணியளவில் வெளியே வந்தார். மதிய உணவுக்கு ஏதாவது ஒரு சைவ ஓட்டலுக்கு அழைத்து செல்லும்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசையிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அந்த ரோட்டில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.
பொங்கல், தோசையை விரும்பி சாப்பிட்டார். மத்திய மந்திரி சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்ததும் அங்கிருந்த பலர் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டனர். அவர்களுடன் ஸ்மிருதி இரானி படம் எடுத்துக் கெண்டார். சிலர் செல்பியும் எடுத்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து காரில் விமானநிலையம் புறப்பட்டு சென்றார்.