தமிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற தொடங்கும் முன்னரே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, பின்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற உள்ளார். இதற்காக, அவைக்கு வந்த அவரை சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றனர்.
ஆளுநர் அவைக்குள் நுழைந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. பின்னர் தனது உரையை தொடங்க ஆளுநர் எழுந்தார். ஆனால், அவர் பேசும் முன்னரே தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுநர் அவர்களை நோக்கி உட்காருங்கள் என்று தமிழில் கூறினார்.
இதனையடுத்து, விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ஆளுநர் அறிவுரை கூறினார். ஆனால், அவரது உரையை புறக்கணித்து தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களுடன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.டி.டி.வி தினகரன் அவையிலேயே இருந்து ஆளுநர் உரையை கேட்டு வருகிறார்.