´ஏக்கிய இராச்சிய´ என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியது. ஆனால், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் கூட்டமைப்பு நெகிழ்வு தன்மையை காட்டாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொது கூட்டம் நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்க போகிறீர்கள்? என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம்.
குறிப்பாக ஏக்கிய இராச்சிய என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். அது எதற்கான இணக்கம் என்றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பது. நான் சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் பூரணமானதும், மீள பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள் என கேட்கிறேன். இதனாலேயே நாங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு இணங்கினோம். அதிகார பகிர்வு தவிர்ந்த மற்றய விடயங்களில் நாங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். ஆனால் அதிகார பகிர்வு விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப் பிடிப்போம்.
காரணம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை. ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேயே இந்தளவு விடயங்களை சாதிக்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஊடகங்களும் பொய்யை சொல்கின்றன. அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள். அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.