ஏசியான் அமைப்புடனான நட்பை பலப்படுத்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏசியான் என அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து 25 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், ஏசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை பலப்படுத்து முயற்சிகளின் ஒரு கட்டமாக, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதலில் தாய்லாந்து சென்ற அவர், நேற்று அங்கிருந்து இந்தோனேஷியா வந்தார்.
ஏசியான் அமைப்புடனான 25 ஆண்டு உறவை கொண்டாடும் வகையில், இந்தோனேஷியாவில் ஆசியான் அமைப்பின் 5-வது வட்டமேஜை கூட்டத்தை சுஷ்மா, நேற்று தொடங்கி வைத்தார். இதில், ஏசியான் அமைப்பின் பொதுச்செயலாளர் டட்டோ பதுகா லிம் ஜாக் ஹோய், இந்தோனேஷிய வெளியுறவு மந்திரி ரிட்னோ மர்சுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ரிட்னோவும் சுஷ்மாவும் இருநாட்டு உறவு குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு, சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற சுஷ்மா இன்று, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்த பயணத்தை தொடர்ந்து, ஜனவரி 25-ம் தேதி டெல்லியில், ஏசியான் – இந்தியா நட்புறவு நினைவு உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் இந்த தகவலை தெரிவித்தார்.