வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தரைக்காற்று பலமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி தொடங்கி, டிசம்பர் 31-ந்தேதி நிறைவடைந்தது. இந்த காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 9 சதவீதம் குறைவாக பருவமழை பதிவானது. பருவமழை விடை பெற்ற உடன் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடுமையான பனியால் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. மாலை மற்றும் அதிகாலை வேளையில் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 9-ந்தேதி தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அன்றைய தினம் தரைக்காற்று 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும். எனவே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 10-ந்தேதியை பொறுத்தவரையிலும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அன்றைய தினம் 35 முதல் 45 கி.மீ. வரை தரைக்காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி விட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.