எச் 1பி விசா கட்டுப்பாட்டுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு

414 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள எச் 1பி விசா கட்டுப்பாட்டுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து ‘அமெரிக்க பொருட்களை வாங்குவோம்’, ‘அமெரிக்கர்களை பணியில் அமர்த்துவோம்’ என்ற கொள்கையை அவர் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்.

அதன் எதிரொலியாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வகை செய்யும் எச்1பி விசா நீட்டிப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் 5 லட்சம் முதல் 7½ லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி மீண்டும் இந்தியா திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை எச்1-பி ‘விசா’ தாரர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் இந்திய ஆதரவாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பெண் எம்.பி. துல்சி கப்பார்ட் கூறும் போது “இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் எச்1 பி. விசா குடும்பத்தினரின் நிம்மதி சீர் குலைக்கும் அமெரிக்காவின் திறமைகள் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.

நமது முக்கிய நட்பு நாடான இந்தியாவுடன் ஆன உறவில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரும் எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உற்பத்தி குறைந்து அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தை அமெரிக்க அரசு உடனே கைவிடும் என நம்புவதாக கூறியுள்ளார்.

ரோகன் எம்.பி. கூறும் போது, “இது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு எதிரான முடிவு” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் எனது பெற்றோர் கிரீன் கார்டு மூலம் இங்கு வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அமெரிக்காவில் இடம் இல்லை என டிரம்ப் கூறுகிறார்.

இது முற்றிலும் தவறு. நாங்கள் இல்லாமல் அமெரிக்கா இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment