பாகிஸ்தானில் கடற்படை தளம் கட்டும் சீனா: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

344 0

பாகிஸ்தானில் சீனா கடற்படை தளம் அமைத்து வருவது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது.

சீனாவும் பாகிஸ்தானும் தீவிர நட்பு நாடுகளாக உள்ளன. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. இதற்காக பலுசிஸ்தான் மாகாணம் ஜிவானியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளத்தை குத்தகைக்கு எடுக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இத்தளம் ஈரானின் சபாகர் துறைமுகத்தின் அருகில் அமைகிறது. சபாகர் துறைமுகம் ஈரான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதி வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது.

தற்போது அந்த துறைமுகத்தை ஒட்டி ஜிவானியில் தற்போது கட்டப்படும் கடற்படை தளம் சீனா- பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமான படை தளமாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஜிவானி கடற்படை தளம் அமைத்து இத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அரபிக் கடலில் கோலோச்ச சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு செய்தியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

வெளிநாடுகளைப் பொருத்தவரை சீனா தனது முதல் ராணுவ தளத்தை ஜிபோட்டியில் நிறுவியுள்ளது.  இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. இங்கு கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல் இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்தையும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment