தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளதையடுத்து அடுத்த வாரம் செவ்வாய் கிழமை பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா கடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு ஆணு ஆயுத சோதனைகளை நடத்தியது. ஏவுகணை சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. இதனால் ஐ.நா. சார்பில் வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் புத்தாண்டு அன்று தொலைக்கட்சியில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா தனது அணியை அனுப்பும் என தெரிவித்திருந்தார். வடகொரிய அதிபரின் அறிவிப்பை அடுத்து, ‘‘பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த வாரம் செவ்வாய் கிழமை பன்முன்ஜம் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வடகொரியா, தென்கொரியா இடையே 2015-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு வசதியை வடகொரியா முறித்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.