அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

478 0

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அறிவையும், தெளிவையும் ஏற்படுத்த வேண்டிய கல்வி முறை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி உலகை விட்டே வெளியேற்றுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டிய காலகட்டம் வந்து விட்டதையே இது காட்டுகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களின்படி மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மொத்தம் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1.47 பேர் வீதம் 540 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் கர்நாடகத்தைத் தவிர மற்ற தென் மாநிலங்களில் மாணவர்களின் தற்கொலை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆந்திரத்தில் தான் இந்தியாவிலேயே மிகவும் குறைவாக 295 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கேரளத்தில் 340 ஆகவும், தெலுங்கானாவில் 349 ஆகவும் இருப்பதாக கணக்கெடுப்பு விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய கல்வி முறையின் கட்டாயங்களுடன் இணைந்து செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வு ஒரு கட்டத்தில் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கும், மதுவுக்கும் மாணவர்களை அடிமையாக்குகிறது.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், விபரீதமான விளைவுகளை தடுக்க முடியும். இதற்காக வாய்ப்பிருந்தால் அனைத்து பள்ளிகளிலும், இல்லாவிட்டால் 2 அல்லது 3 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டைக் கட்டாயமாகக் கொண்டதாகவும் மாற்ற தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment