போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் மூன்றாவது நாளாக இன்றும் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார். நாளைக்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தற்போது 80 சதவிகிதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், நாளை 100 சதவீதம் இயக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.