மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் குப்பை கொட்டும் விடயத்தில், மனசாட்சி இல்லாது, நகர சபை நிர்வாகம் செயற்படுவதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓட்டுப்பள்ளி வட்டாரத்தில் நேற்று (05) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அவர் மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஏறாவூர்ப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத்தால் சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்த பல வருடகாலமாக வாவியோரத்தில் கொட்டப்பட்டன. இதனால் வாவி அசுத்தமடைந்தது.
“அயற்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதுடன், பாடசாலை மாணவர்களும் கலாசார நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறையீடு செய்யப்பட்டது.
“இந்நிலையில் இப்பிரதேசத்தில் பல தசாப்தகாலமாக அரசியல் அதிகாரித்திலிருந்தவர்கள்கூட மக்களின் இப்பிரச்சினையைப் பொருட்டாகக் கொள்ளவில்லை.
“ஆனபோதிலும், நாங்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அரசியல் அதிகாரத்திலிருந்தபோது, கொடுவாமடு பிரதேசத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் நிர்மானப்பணிகளைத் துரிதப்படுத்தி திறக்கச்செய்ததுடன், பல உள்ளூராட்சிமன்ற அதிகார பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, அங்கு கொட்டச்செய்தோம்.
“இதையடுத்து, ஏறாவூர்ப் பிரதேசத்தின் பாரிய பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட்டது.
“எனினும், தற்போது எமக்கு அரசியல் அதிகாரம் இல்லாதிருப்பதனால் நகர சபையின் புதிய நிர்வாகம், மீண்டும் குப்பைகளை எமது வாவியோரம் கொட்டுகிறது. எமது மக்களைப்பற்றி அவர்கள் கவலைகொள்ளவில்லை” என்றார்.