முதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

282 0

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஐகோர்ட் உத்தரவிட்டும், தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் மூன்றாவது நாளாக இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளர். நாளைக்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனவே, நாளை பணிக்கு திரும்பாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.  அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தற்போதுள்ள நெருக்கடியை நீக்கி தமிழக மக்களின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment