தமிழரசுக் கட்சியின் சவப்பெட்டியின் கடைசி ஆணியை மாவை. சேனாதிராசாதான் அடிப்பார் என்று ஆரம்பத்தில் மங்கையர்கரசி கூறிய கூற்றுக்கு ஏற்றாற்போல் தற்போது அவர் செயற்படுகின்றார். தமிழரசின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவகரன். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிக்கை வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
போருக்குப் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வர வேண்டும், எம்மைச் சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வந்தவர் எம்.ஏ.சுமந்திரன்.
மாவை.சேனாதிராசா பரிதாபத்துக்குரிய மனிதனாக இருக்கின்றார். அவருக்கு எதுவும் விளங்காது. அவரைத் தலைவராக்கி விட்டால் போதும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக்கிவிட்டால் போதும் அல்லது ஐயா என்று அழைத்தால் போதும். அவருக்கு முதுகெலும்பு என்றதே இல்லை.
அவரிடம் ஐந்து தம்பிகள் உள்ளன. ஓம் தம்பி, பார்ப்பம் தம்பி, பேசுவம்தம்பி, சந்திப்பம் தம்பி, பார்க்கலாம் தம்பி என்று அவற்றை வைத்தே ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டார். 2011ஆம் ஆண்டு கூட்டமைப்புக்குள் சுமந்திரன் வந்தபோது அது மிகவும் மோசமானது என்று கூறியிருந்தேன்.
இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2013 ஆம் ஆண்டிலிருந்தே நாம் முயற்சித்தோம். அந்தப் பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை.
அனைவரையும் இணைக்கும் முயற்சிகளில் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய கஜேந்திரகுமார் தவறிவிட்டார். பல முயற்சிகளை அவர் எடுத்திருந்தபோதும் சில தவறுகளையும் அவர் செய்துவிட்டார். இந்தச்சமயத்தில் அது தொடர்பில் விமர்சிக்க விரும்பவில்லை – என்றார்.