ராஜீவ் காந்தி கொலை கைதியான பேரறிவாளன் நுரையீரல் மற்றும் இருதய பாதிப்புக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.
ராஜீவ் காந்தி கொலை கைதியான பேரறிவாளன் வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு மாதம் பரோலில் வீட்டிற்கு சென்றார். பரோல் முடிந்து மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல், இருதய பாதிப்பு ஏற்கனவே இருந்தது.
அதற்கு அங்கு சிகிச்சை எடுத்து வந்தார். சென்னையில் மேல் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு புழல் சிறைக்கு பேரறிவாளன் மாற்றப்பட்டார். அங்கு தனி அறையில் இருந்த அவர் இன்று காலை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கொண்டு வரப்பட்டார்.
நுரையீரல் மற்றும் இருதய துறை சார்ந்த டாக்டர்கள் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் தற்போதைய உடல் பாதிப்பு குறித்தும் கேட்டறிந்த டாக்டர்கள் அதற்கேற்ற மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற அறிவுறுத்தினர்.