போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வு எவ்வளவு?

382 0

போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வை அனைவரும் ஏற்பார்கள் என்றும் அனைத்து பஸ்களும் முழுமையாக இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற 13-வது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் ஆலோசனை பெற்று 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் அரசுக்கு ஆதரவாக கையெழுத்து இட்டுள்ளனர். 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிப்பதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் 81 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகிறது.

2013 முதல் 2016 வரை வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தால், அவர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு மாதம் 2 கோடி ரூபாய் செலவாகிறது.

இந்த ஊதிய உயர்வு காரணமாக மாதம் 83 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 684 ரூபாயும், அதிகபட்சமாக 11 ஆயிரத்து 361 ரூபாய் சம்பளமும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.

கடந்த ஊதிய ஒப்பந்தத்தின் போது, குறைந்தபட்ச ஊதியம் ஆயிரத்து 468 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 ஆயிரத்து 77 ரூபாயாகவும் இருந்தது. தமிழக அரசு தற்போது அதிகப்படியான ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு அடிப்படை ஊதியமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் வழங்கப்பட உள்ளது. நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படும்.

நிலுவை தொகை ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 1.9.2017 முதல் 4 மாதங்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் மொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் எங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தில் மட்டும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். 70 சதவீத தொழிலாளர்கள் எங்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர்.

அனைத்து பஸ்களும் தமிழகம் முழுவதும் முழுமையாக இயக்கப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்புடன் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை நடந்த கூட்ட அரங்கத்தில் வெளியேறிய 13 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தி.மு.க.வின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 2.57 காரணி கொண்டு அடிப்படை ஊதியத்தில் பெருக்கி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். 1.4.2003-ல் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை எப்போது அரசு வழங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பிடித்தம் செய்யும் தொகையை தொழிலாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தோம். அவர்கள் 2.57 காரணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

குறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள்.

ஊதிய விகிதம் 2.57 காரணி மற்றும் 2.44 காரணி என இரு தரப்பாக கணக்கிட்டு, குழப்பமான கணக்கீடுகளை தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது 1 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும். ஆகவே எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தோம். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

நாங்கள் மகிழ்ச்சியாக இந்த போராட்டத்தை அறிவிக்கவில்லை. அரசு எங்களை முறையாக எதிர்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

அரசு எப்போது அழைத்தாலும், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும். மேலும் பல சங்கங்களும், எங்களுக்கு ஆதரவாக வருவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment