தி.மு.க.வும், தினகரனும் ஜனநாயகத்தை சீரழித்தவர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
வடசென்னையில் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமங்கலம் தேர்தலில் தி.மு.க. பணத்தை கொடுத்து வெற்றி பெற்றது. அந்த திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் வகையில் ஹவாலா பாணியில் 20 ரூபாயை கொடுத்து, கடன் சொல்லி தினகரன் ஓட்டு வாங்கினார். அதனால் தினகரனை மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க.வும், தினகரனும் ஜனநாயகத்தை சீரழித்தவர்கள். பணத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கொள்கையில் மட்டுமே அ.தி.மு.க. நம்பிக்கை வைத்துள்ளது.
நடிகர் கமல், ‘டுவிட்டரில்’ தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவையும், தினகரனின் ஹவாலா பாணியையும் சொல்லி இருக்கலாம். தைரியம் இருந்தால் ஹவாலா பாணியில் வெற்றி பெற்ற தினகரனை, கமல் திட்டட்டும். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜனநாயக மக்களை நம்பியுள்ள அ.தி.மு.க.வை திட்டி உள்ளார். மத்திய அரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தபோது தமிழகத்திற்கு எந்தவித திட்டமும் கொண்டுவரவில்லை.
தி.மு.க. குடும்பம் மட்டும்தான் ஆசியாவில் வளம் மிக்கதாக மாறியது. தமிழகம் எந்த வளமும் பெறவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு என எந்த பிரச்சினைக்கும் தி.மு.க. மூலம் தீர்வு ஏற்படவில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கு எல்லாம் அ.தி.மு.க. தீர்வு கண்டது. தி.மு.க.வை போல் மாநில உரிமையை காவு கொடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.