‘சுவசரிய’ அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

465 0

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாவது கட்டத்தின் கீழ் அம்பியுலன்ஸ் வண்டிகளைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் சார்பில் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா , இந்தியாவின் சார்பில் உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சண்டு ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

அரசாங்கம் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்காக பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகிறது . நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துகையில் கல்வி, சுகாதாரம் முதலான துறைகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மென்மேலும் வளர்க்கும் நோக்கத்துடன் சுவசரிய சேவை அறிமுகம் செய்யப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒன்றரைக் கோடி டொலர் நன்கொடையுடன் 209 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.

முதற்கட்டத்தின் கீழ் 88 அம்பூலன்ஸ் வண்டிகள் கிடைத்தன. அவற்றில் 56 வண்டிகள் மேல் மாகாணத்திற்கும் 32 வண்டிகள் தென்மாகாணத்திற்கும் வழங்கப்பட்டன. சுவசிரிய அம்பூலன்ஸ் வண்டி 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 56 ஆயிரம் பேர் அம்பூலன்ஸ் சேவையைப் பெற்றுள்ளார்கள்.

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக இந்த அம்பூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்.

Leave a comment