அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் யூரிமெற்ரி தெரிவித்துள்ளார்.
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ரஷ்ய தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சிற்குட்பட்ட அணுசக்தி அதிகாரசபை கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் தூதுவர் இதன்போது அமைச்சரிடம் கேட்டறிந்தார்.
அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் கைத்தொழில் துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும் என்றும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதற்காக தமது நாடு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையை போன்று நிதிக்கான கடன்வசதிகளையும் வழங்க கூடிய நடைமுறைகள் குறித்த விடயங்களையும் கண்டறிவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சியம்பலாப்பிட்டிய இலங்கையில் நிலவும் கதிரியக்கத்தை போன்று இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பிலும் அணுசக்தி அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. எதிர்காலத்தில் கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக இவ்வாறானவற்றை பயன்படுத்த கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
இதேபோன்று பலவருடகாலமாக இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர உறவுகள் மற்றும் நல்லுறவை உறுதிசெய்யும் வகையில் ரஷ்யாவினால் இலங்கையின் கைத்தொழில்துறை அபிவிருத்திக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கும் அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.