எதிர்வரும் தைப் பொங்கலை முன்னிட்டு, எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தேங்காய்களை நியாய விலையில் விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருநாகல் பொருந்தோட்ட நிறுவனத்தில் விற்பனை முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தன தமது நிறுவனம் இரண்டு இலட்சம் தேங்காய்களை கடந்த மாதம் 31ம் திகதி வழங்கியதாக தெரிவித்தார்.
இதேபோன்று எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனமும் 50,000 தேங்காய்களை சதொசவிற்கு வழங்கியுள்ளது. சதொச நிறுவனத்திற்கு தேவையான தேங்காய்களை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளது.
இதேவேளை, குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
தைப்பொங்கலை முன்னிட்டு தமது நிறுவனத்திற்குட்பட்ட தோட்டங்களில் பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.