ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் 02.01.2018 அன்று மதியம் சிறுத்தை ஒன்று தொழிலாளர்களை தாக்கியிருந்தது.
இதனையடுத்து நுவரெலியா மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸார் ஆகியோர் பொது மக்களின் உதவியுடன் சிறுத்தையை பிடிப்பதற்கு 02.01.2018 அன்று மாலை வரை முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.
தொடர்ந்தும் நேற்று (03) காலை முதல் சிறுத்தையை பிடிப்பதற்காக மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு, உடவளவ, நல்லதண்ணி ஆகிய பிரதேசங்களிலிருந்து வருகை தந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஹட்டன் பொலிஸார் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இந்த முயற்சியின் காரணமாக பன்மூர் தோட்ட தொழிலாளர்கள் வழமையான பணியை பகிஷ்கரிப்பு செய்திருந்தனர்.
இருந்தபோதிலும், சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையின் போது வெடிகள் போடப்பட்டும் சிறுத்தையை மதிய வேளை வரை பிடிக்க முடியாமல் இருந்தது.
இதன்பின் சிறுத்தை இல்லை என தெரிவித்து அதிகாரிகள் அவ்விடத்திலிருந்து செல்ல முற்பட்ட வேளையில் தொழிலாளர்கள் அவ் அதிகாரிகளை தடுத்து சிறுத்தையை பிடித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டுள்ளனர்.
இதனையடுத்து அவ் அதிகாரிகள் நேற்று மாலை 5 மணியளவில் சிறுத்தையை பிடிப்பதற்கான இரும்பிலான கூடு ஒன்றை அத்தோட்டத்திற்கு கொண்டு வந்து சிறுத்தை நடமாடுவதாக கூறப்படும் தேயிலை மலையில் வைத்துள்ளனர்.
இருந்தும் தோட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பது குறிப்பிடதக்கதாகும்.