நல்லூர் கந்தனுக்கோர் கண்ணீராலாத்தி! இரா.மயூதரன்.

397 0

15708நல்லூரில் கந்தனாகவும்
சன்னிதியில் வேலனாகவும்
கதிர்காமத்தில் கதிர்வேலனாகவும்
ஊரெங்கும் வேல் கொண்டு
கொழுவிருக்கும்
ஈழ நிலத்தின்
இணையில்லா தெய்வமே;

எமது வீடு எரிந்தாலென்ன..
எமது குடி மூழ்கினாலென்ன..
எமது தலைமேல் குண்டுமழை பொழிந்தாலென்ன..

எமது மூச்சு நின்றாலென்ன..
எமது நா வறண்டாலென்ன..
எமது வயிறு பசியால் வாடினாலென்ன..

எமது உறவுகள் கைதுசெய்யப்பட்டாலென்ன..
எமது உறவுகள் கடத்தப்பட்டாலென்ன..
எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டாலென்ன..

எமது உறவுகள் வன்புணர்வு செய்யப்பட்டாலென்ன..
எமது உறவுகள் அனாதைகளாக்கப்பட்டாலென்ன..
எமது உறவுகள் சிறையிருட்டில் தவித்தாலென்ன..

எமது உறவுகள் செத்து விழுந்தாலென்ன..
எமது ஊரே சுடுகாடாய் போனாலென்ன..
ஏன் எமது நாடே அழிந்தாலென்ன..
உனக்கேதும் குறைவைக்கவில்லையே நாம்!

நித்தமும் உனக்கு
ஆறு காலப் பூசைகள்..
ஆண்டொருமுறை
25 நாள் திருவிழாக்கள்..
காவடி எடுத்தல்..
தீச்சட்டியெடுத்தல்..
அங்கப்பிரதட்சணம் செய்தல்..
அடியழித்தல்..
என வேண்டுதல்கள் பற்பலவாயிற்றே..

இருந்தும்
உன் கருணைப் பார்வை
எம்மீது படவில்லையே…!

‘யாமிருக்கப் பயமேன்’
எனும் உந்தன் தாரக மந்திரம்
இன்றுவரை
எதிரிகளுக்கும்
துரோகிகளுக்குமல்லவா
துணைநிற்கிறது!

இயற்கை விதிமீறி
பலவந்தமாக பறிக்கப்பட்டது
ஒன்றா
இரண்டா
லட்சம் பேரின் உயிர்களல்லவா!

உயிர்ப்பறிப்பின்
போது மூடிய
உன் கருணைக் கண்கள்
நீதி மறுக்கையிலும்
திறக்கவில்லையெனில்
நீ
கல்லா
கடவுளா…?

ஒருவேளை
இனம் மொத்தமும்
அழிக்கப்பட்ட பின்னர்தான்
உந்தன் மனமிரங்குமோ தெரியவில்லை?

நம்பி நின்ற
நாம் நாதியற்றுப் போயினும்
உனக்கொரு குறை வையோம்
முருகா;
நல்லூரம் பதியில்
நாளும் பொழுதும்
மனையாளுடனும்
துணையாளுடனும்
நலமுடனே நலமுறுக!

வாழ்க வளமுடன்!

இரா.மயூதரன்.