வடகொரியா – தென் கொரியா இடையே நேரடி தொலைபேசி வசதி

310 0

தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ‘ஹாட்லைன்’ தொலைபேசி (நேரடி தொலைபேசி) வசதியை தொடங்குவதற்கு வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.

வடகொரியா, தென்கொரியா இடையே 2015-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு வசதியை வடகொரியா முறித்துக்கொண்டது.

இந்த நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். தென்கொரியாவும் இதை ஏற்றுக்கொள்கிற விதத்தில், உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ‘ஹாட்லைன்’ தொலைபேசி (நேரடி தொலைபேசி) வசதியை தொடங்குவதற்கு வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டார். இதை வடகொரியாவின் உயர் அதிகாரி ஒருவர் டெலிவிஷனில் அறிவித்தார்.

அப்போது அவர், “தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா குழுவினரை அனுப்பி வைப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் விவாதிக்கும்” என்று குறிப்பிட்டார்.

‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதியை தொடங்குமாறு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டிருப்பது குறித்து தென்கொரியா அதிபர் மூனின் ஊடக செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதன்மூலம் எல்லா நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவது சாத்தியம் ஆகும்” என குறிப்பிட்டார்

Leave a comment