முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆலோசனை

2492 0

பல்வேறு இடர்பாடுகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாது முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கைத்தறி நெசவு ஆலையை தொடர்ந்தும் இயக்குவதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதுகுறித்து வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 28.12.2017 அன்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அமைச்சர் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் தொழிற்திறன் அபிவிருத்தி நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த கைத்தறி நெசவு ஆலையில் 9 கைத்தறி கருவிகளைக் கொண்டு 17 தொழிலாளர்கள் இயங்கிவந்திருந்தார்கள். இந்நிலையில் கெயார் நிறுவனத்தினால் கைத்தறி நெசவு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. பயிற்சிக் காலத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவும் கெயார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

பயிற்சி பெற்ற நெசவாளர்களுக்கு போதிய வருவாய் உறுதிப்பாடு இல்லாத காரணத்தினால் தொடர்ந்தும் கைத்தறி நெசவில் ஈடுபட முடியாமல் அவர்கள் வேறு தொழில்களுக்கு செல்லும் நிலையேற்பட்டுள்ளதனால் முடங்கிப்போயிருக்கும் குறித்த கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பு வகித்து வரும் தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் தொழிலாளர்களால் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment