சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் – 2018

13079 0

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும் நிகழ்வானது 01.01.2018 திங்கட்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 19வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது நிகழ்வுச்சுடர், பொதுச்சுடர், ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

சண்சிங்கர் புகழ் விஜயன் அவர்களின் நேரடி நெறியாள்கையில் ரிதம் மற்றும் சாரங்கி இசைக்குழுக்களின் இளம் இசைக்கலைஞர்களோடு தமிழகத்திலிருந்து வருகை தந்த தென்னிந்திய பின்னணிப்பாடகர் முகேஷ; அவர்களும் இணைந்து தாயக எழுச்சிப்பாடல்களை நிகழ்வின் ஆரம்பத்தில் பாடியமையானது மிகவும் உணர்வெழுச்சியாக அமைந்ததோடு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புத்தாண்டுச் செய்தியில் உறுதியெடுத்தலுடன் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் அவலம் நிறைந்த வாழ்வோடு தொடர்ந்தும் அல்லலுறும் எமது உறவுகளின் மீள் வாழ்வாதாரத்தை நோக்கமாகக் கொண்ட அன்பே சிவம் செயற்திட்ட அமைப்பின் காணொளித் தொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டு நிதியுதவி கோரப்பட்டபோது சுவிஸ் தமிழர்கள் தமது கடமையறிந்து நிதி அன்பளிப்புக்களை வழங்கியமையானது அவர்கள் தமிழீழ வாழ் உறவுகள் மீது வைத்துள்ள பற்ருறுதியையும், பாசத்தையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

இவ் மாபெரும் புத்தாண்டு நிகழ்வில் சுவிஸ், ஐரோப்பா வாழ் முன்னனிக் கலைஞர்களின் எழுச்சிப்பாடல்கள், திரையிசைப்பாடல்கள், எழுச்சிநடனங்கள், திரையிசை மற்றும் மேற்கத்தேய நடனங்கள், நகைச்சுவை நாடகங்களுடன்; வேறுபல நிகழ்வுகள் மக்கள் மனதை கொள்ளை கொண்டதுடன், அவர்களின் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் மூலம் கலைஞர்களை ஊக்குவித்து மகிழ்ந்தனர்;. சமகால தாயக, புலம்பெயர் அரசியல் நிலவரங்களை மையமாகக் கொண்ட சிறப்புரையும் நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த கலைஞர்கள், வர்த்தகப் பெருந்தகைகள், ஊடக அனுசரணையாளர்கள் அனைவருக்கும் கௌரவப்பரிசில்கள் வழங்கிக் மதிப்பளிக்கப்பட்டதோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மண்ணின் மலரும் நினைவுகளுடனும், சங்கமித்த உறவுகளின் உற்சாகத்துடனும் இனிதே நிறைவுபெற்றன.

புத்தாண்டும் புதுநிமிர்வும்2018 நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஊடகங்கள், ஆதரவாளர்கள், இன உணர்;வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியுணர்வுடன் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துக்கொள்கின்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. 

Leave a comment