நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கினாலும், தமிழர்களுக்கான ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே விளங்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தை நேற்று (செவ்வாய்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கிலே சிரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாக எங்களுடைய கலாசார விழுமியங்களுடன் எங்களுடைய வாழ்விடங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றோம். எங்களுடைய தன்னிப்பட்ட கட்சியினருடைய இலாபங்கள் தனிப்பட்டவர்களின் இலாபங்கள் என்பவற்றையெல்லாம் துறந்து தமிழ் மக்களின் நன்மைக்காக பணியாற்றி வருகின்றோம்.
வடமேல் மாகாணத்தை அண்டிய பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள் அடையாளமற்றுப் போய்விட்டார்கள். தமிழர்கள் என்கின்ற நிலமை அங்கு இல்லை. கதிர்காமத்தில் முருகன் உள்ளார் அவரைச் சுற்றி இருந்த தமிழர்கள் இல்லை. கங்கையைக் கடந்து செல்லும் போது முருகனுடைய வேலும் ஓம் முருகா என்ற எழுத்தும் இருந்தது. இப்போது அவற்றையும் காணவில்லை. தமிழர்களுடைய அடையாளம் அழிந்துவிட்டது” என்றார்.