தன்னுடைய கட்சி தோல்வியடையுமானால் இலங்கை பிளவுபட்டு தமிழீழம் மலர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல்போய்விடும். தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் மாநாடு சுகததாச உள்ளகவிளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த அழைப்பை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல், வரலாறு காணாத ஊழல் குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்கள் விற்பனை, அபிவிருத்தித் திட்டங்கள் முடக்கம் ஆகியவற்றால் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் தேர்தலொன்றுக்கு முகம்கொடுத்துள்ளோம். கூட்டு எதிரணி கடுமையாகப் போராடியதாலேயே தேர்தலை நடத்துவதற்குரிய சந்தர்ப்பமும் உதயமானது என்பதை மறந்துவிடக்கூடாது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி எமது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எமது கட்சியின் செயலரினாலேயே தோற்கடிக்கப்பட்டாலும் அரசின் பெரிய மோசடிகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 60 நாள்களுக்குள்ளேயே புத்துயிர் பெற்றோம்.
மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை, அதன் முன்னாள் தலைவரான டியு.குணசேகர நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்த தருணத்தில்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனகூட, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றவே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகக் கூறியிருந்தார்.
அரசின் மோசடியான செயற்பாடுகளை எதிர்ப்போரை எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களோ அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு எமது அழைப்பை நிராகரித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையின்கீழ் செயற்பட்டு வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்தேனும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வார்கள் என்று பார்த்தால் எம்மால் செய்யப்பட்ட மத்தள பன்னாட்டு வானூர்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தார்கள். இப்படியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் தலையசைப்பது எமக்குக் கவலையாக இருக்கிறது.
நாடு தலைகீழாக மாறிவிட்டது. தம்மை அதிகாரத்துக்கு கொண்டுவந்த அமெரிக்காவையே அரசு பகைத்துக் கொண்டதன் விளைவாகத்தான் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையும் இல்லாமல் செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வடக்குக்குச் சென்று, புதிய அரசமைப்பின் ஊடாக கூட்டாட்சி உதயமாகும் என்றும், பௌத்த தேரர்களை ஏமாற்றுவதற்காகவே பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் பரப்புரை செய்து வருகின்றார். இந்த விடயத்தில்கூட தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையுமே இந்த அரசு கூறி ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி வருகின்றது.
தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்பதில்தான் நாட்டின் வெற்றியே தங்கியுள்ளது. மாறாக, இந்தச் சின்னத்தைத் தோற்கடித்தோமேயானால் நாடு பிளவுபடுவதை எவராலும் தடுத்துநிறுத்தவே முடியாது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதியான சூழலானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து இராணுவத்தின் போராட்டத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். இதனை இல்லாதொழிக்கும் வகையிலும் காட்டிக்கொடுக்கும் வகையிலும் எவரும் வாக்களிக்கக்கூடாது என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேநேரம்,
எனது ஒளிப்படத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் தற்போது ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உண்மையில் இது மகிழ்ச்சியே. நான் யாரையும் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவேமாட்டேன். எனது ஒளிப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எனது ஒளிப்படம் உரித்தானது என்பதை நான் இந்த வேளையில் பதிவு செய்துக் கொள்கிறேன் – என்றார். சிறிது நேரம் தமிழ் மொழியிலும் அவர் உரையாற்றினார்.