எல்லையில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ செலவிட வேண்டும்- டிரம்ப்

371 0

201609011352102160_Donald-Trump-says-In-border-build-wall-and-have-Mexico-pay_SECVPFஅமெரிக்காவில் குடியேறுவதை தடுக்க அண்டை நாடான மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு அந்நாட்டு அரசே செலவிட வேண்டும் என டொனால்டு டிரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி தலைவராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சினையில் சிக்கி வருகிறார்.

அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் சட்டத்துக்கு புறம்பாக குடியேறி இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து ஏராளமானவர்கள் இதுபோன்று குடியேறி வருகின்றனர்.

எனவே அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் நீண்ட தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கூறியிருந்தார். அதே கருத்தை தற்போதும் பிரதிபலித்துள்ளார்.

அரிசோனாவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இவர் இவ்வாறு கட்டப்படும் சுவருக்காக 100 சதவீத செலவையும் மெக்சிகோ அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக, டொனால்டு டிரம்ப் மெக்சிகோ சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் பெனா நியடோனை சந்தித்து பேசினார். அப்போது இதுகுறித்து அவரிடம் பேசவில்லை. தற்போது டிரம்ப் பேசியது குறித்து மெக்சிகோ அதிபர் கூறும்போது, ‘தடுப்பு சுவர் கட்டும் செலவை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தார்.