தமிழகத்தில் புத்தாண்டையொட்டி ஆண்டின் கடைசி நாளில் மட்டும் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம்.
2018 புத்தாண்டை டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு உலகம் முழுவதும் இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டல்களில் நடனம், மது விருந்து என அமர்க்களப்பட்டது. சென்னையிலும், தமிழ்நாட்டின் மற்றஇடங்களிலும் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
புத்தாண்டையொட்டி தமிழக அரசின் ‘டாஸ்மாக்‘ மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறுகிறது.
நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் முன் கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்தனர். இதனால் புத்தாண்டு வரை ஒரு வாரத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி ஆண்டு கடைசிவரை இறுதியில் மட்டும் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம். அதாவது ரூ.20 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.
முதல் முறையாக கடந்த தீபாவளியின் போது தான் டாஸ்மாக் மது விற்பனை 14 சதவீதம் குறைந்தது. அதன் பிறகு தினசரி விற்பனை ரூ.65 கோடி முதல் 70 கோடியாக இருந்தது. டிசம்பர் 30-ந்தேதி சனிக்கிழமையில் இருந்து விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.139 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது 2012-ல் நடந்த விற்பனையைக் காட்டிலும் 75 சதவீதம் அதிகம் ஆகும். சென்னை தவிர தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் மட்டும் ரூ.91 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
2016-ம் ஆண்டுடிசம்பர் 31-ந்தேதி ரூ.112 கோடிக்கும், ஜனவரி 1-ந்தேதி ரூ.98 கோடிக்கும் விற்பனையானது. மொத்த விற்பனை ரூ.210 கோடி.
2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ரூ.139 கோடிக்கும், ஜனவரி 1-ந்தேதி 91 கோடிக்கும் விற்பனையானது. மொத்த விற்பனை ரூ.230 கோடி.
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை தொடர்ந்து மதுக்கடைகள் 4,900-ல் இருந்து 6,000மாக அதிகரிக்கப்பட்டது.
இதற்கிடையே மதுக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக எலைட் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இங்கு சில்லரை விலை மது ரூ.720 என பாட்டிலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.830 வசூலிக்கிறார்கள். இதுபோல் மற்ற சில்லரை கடைகளிலும் கூடுதலாக வசூலிக்கிறார்கள். மது விற்பனைக்கு பில் வழங்கப்படுவதில்லை. இது முறைகேடுக்கு வழிவகுப்பதாக கூறுகிறார்கள்.